
கொழும்பு: இந்தியாவில் அகதி களாக தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த விருப்பத்துடன் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், தமிழர்களுக்காக தனி நாடு கேட்டு நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வந்தன. இது, 1983க்குப் பின், உள்நாட்டு போராக வெடித்தது. இவ்வாறு, 30 ஆண்டுகள் நீடித்த இந்த உள்நாட்டு போர், 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது.உள்நாட்டு போரின்போது, ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இலங்கை அகதிகள் தாமாக முன்வந்து, நாடு திரும்புவதை எளிதாக்கும் வகையில், புதிய குடியேற்ற விதிகளுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் விபரம்: போர் காலத்தில் முறையான பயண ஆவணங்கள் இன்றி அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக பதிவு செய்தோர் மீது பதியப்பட்டிருந்த குடியேற்ற சட்ட மீறல் வழக்குகளும், சிக்கல்களும் தளர்த்தப்படுகின்றனஐ.நா., அகதிகள் அலுவலகம் உதவியோடும், இந்தியாவில் உள்ள இலங்கை துாதரகங்கள் வாயிலாகவும், இவர்களின் உண்மையான குடியுரிமை உறுதி செய்யப்படும் இலங்கை திரும்ப விரும்புவோர் மீது கொலை, தேசத்துரோகம் அல்லது தீவிர குற்றச்சாட்டுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து, புலனாய்வு பிரிவு வாயிலாக தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படும். எவ்வித சட்ட சிக்கல் களும் இன்றி, அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்கள் வழியாக தற்காலிக பயண ஆவணங்கள் வாயிலாக இலங்கைக்குள் நுழைய இவர்கள் அனுமதிக்கப்படுவர்.தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளோர் மட்டும் எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.கடந்த 2006 ஆகஸ்ட் 1க்கு முன் மற்றும் போர் முடிவுக்கு வந்த 2009 மே 19 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் குடியேறியவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.













