
பெங்களூரு, ஆக. 12- பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையின் ‘ஹை-செக்யூரிட்டி’ பாராக்கில் சசிபி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் விசாரணை கைதியான பிரதாப் ராய் ஆகியோரிடமிருந்து தடைசெய்யப்பட்ட செல்போன், சார்ஜர், பென்ட்ரைவ் மற்றும் பாக்கெட் நோட்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகர கூடுதல் காவல் ஆணையரின் (குற்றம்) உத்தரவின் பேரில், சசிபி காவல் ஆய்வாளர் எம்.எல். சுப்ரமணிய சுவாமி தலைமையிலான படை, ஆகஸ்ட் 11 பிற்பகல் 2:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை சிறையின் பாதுகாப்புப் பிரிவுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டது. பாதுகாப்புப் பிரிவு 3-ன் முதல் தளத்தில் உள்ள அறை எண் 4-ல் சோதனை நடத்தியபோது, நீல நிற செல்போன், வெள்ளை நிற சார்ஜர், நீல நிற பாக்கெட் நோட்புக் மற்றும் கருப்பு நிற பென்ட்ரைவ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.அறையிலிருந்த கைதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீல நிற நோட்புக் பிரஜ்வல் ரேவண்ணாவுடையது என்பது தெரியவந்தது. மற்றொரு கைதியான பிரதாப் ராய், செல்போன், சார்ஜர் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவை தன்னுடையது என்றும், இதன் மூலம் வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து பேசி வந்ததாகவும் ஒப்புக்கொண்டார். மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவும் இந்த போனைப் பயன்படுத்தித் தனது வழக்கறிஞர் மற்றும் உறவினர்களிடம் பேசி வந்ததாகத் தெரிவித்தார்.பறிமுதல் செய்யப்பட்ட போனில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ ஆகிய செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன. அவை அனைத்தும் பாஸ்வேர்டு மூலம் பூட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து அதிகாரிகள் கேட்டபோது, பாஸ்வேர்டைக் கூற இரு கைதிகளும் மறுத்துவிட்டனர். சிறைக்குள் சட்டவிரோதமாகத் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தியது மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்திற்காக, இருவர் மீதும் கர்நாடக சிறைத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.













