
மண்டியா: ஆக. 14-
கர்நாடக மாநிலம் துமகூரு கிராமப்புற தொகுதி எம்.எல்.ஏ. பி.சுரேஷ்கௌடா. இவருடைய மகள் ஐஸ்வர்யா.
கடந்த 12-ந் தேதி ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, ஆரதி உக்கடா கோவிலில் பீமன அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டிருந்தனர். அப்போது எம்.எல்.ஏ. மகள் ஐஸ்வர்யா, தனது செல்வாக்கை பயன்படுத்தி ‘வி.ஐ.பி.’ பாதையில் சென்று கருவறை பகுதி வரை சென்றுள்ளார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவிதாவிடம், தன்னை உடனடியாக சாமி கும்பிட உள்ளே விடுமாறு ஐஸ்வர்யா கூறியுள்ளார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர், “இன்று அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் உள்ளே விட முடியாது. உங்களை அனுமதித்தால் வரிசையில் நிற்கும் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே சிறிது நேரம் காத்திருங்கள்” என்று கூறியுள்ளார். அப்போது சாதாரண உடையில் இருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமி என்பவர் கருவறைக்குள் சென்றதை பார்த்த ஐஸ்வர்யா, அதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் சவிதா, “அவர் எங்கள் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், பணி நிமித்தமாக உள்ளே செல்கிறார்” என்று விளக்கமளித்துள்ளார். ஆனாலும் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, “என்னை உள்ளே விட்டே ஆக வேண்டும்” எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், பெண் சப்-இன்ஸ்பெக்டர் சவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது கன்னத்தில் பளார் அறைவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சவிதா கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கப்பட்டணா கேதனஹள்ளி காவல் நிலைய போலீசார் எம்.எல்.ஏ. மகள் ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு (எப்.ஐ.ஆர்.) செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













