Home தலைப்பு செய்தி பாட்டீல் புதிய சபாநாயகர்

பாட்டீல் புதிய சபாநாயகர்

பெங்களூரு: ஆக. 14:
கர்நாடக சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக குருபாதகவுடா சங்கனகவுடா பாட்டீல் (ஜி.எஸ். பாட்டீல்) ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று சட்டமன்றத்தில் முதல்வர் டி.கே. சிவகுமார் அவர்கள் புதிய அமைச்சர்களை அவைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நிறைவடைந்ததும், தற்காலிக சபாநாயகர் டி.பி. ஜெயச்சந்திரா அவர்கள் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிக்குமாறு முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி, குருபாதகவுடா சங்கனகவுடா பாட்டீலை சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கும் முன்மொழிவை முதல்வர் டி.கே. சிவகுமார் முன்மொழிந்தார்.
முதல்வர் டி.கே. சிவகுமாரின் இந்த முன்மொழிவை துணை முதல்வர் டாக்டர் ஜி. பரமேஸ்வர் வழிமொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இம்முன்மொழிவுக்கு அவை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, புதிய சபாநாயகராக ஜி.எஸ். பாட்டீல் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தற்காலிக சபாநாயகர் டி.பி. ஜெயச்சந்திரா அறிவித்தார்.
பின்னர், முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் ஆகிய இருவரும் ஜி.எஸ். பாட்டீல் அமர்ந்து இருந்த இருக்கைக்குச் சென்று, அவரது கரங்களைப் பற்றி சபாநாயகர் பீடத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தனர். அப்போது அவை உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அரசியலமைப்புச் சட்டப் பதவியான சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் மேலிடம் பெயரை இறுதி செய்து பட்டியல் அனுப்பியதைக் கண்டித்து, பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் இந்தத் தேர்வு நடைமுறையைப் புறக்கணித்தன. இதனால் புதிய சபாநாயகர் தேர்வின் போது பாஜக, ஜேடிஎஸ் உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.
ஜி.எஸ். பாட்டீல் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியான உடனேயே பாஜக மற்றும் ஜேடிஎஸ் உறுப்பினர்கள் அவைக்குள் வந்தனர். அதன்பின், சபாநாயகர் பீடத்தில் அமர வைத்த புதிய சபாநாயகர் ஜி.எஸ். பாட்டீலுக்கு முதல்வர் டி.கே. சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துப் பேசினர். கதக் மாவட்டத்தின் ரோணா தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள ஜி.எஸ். பாட்டீல் 1948-இல் பிறந்தவர். பெற்றோர் சங்கனகவுடா ருத்ரகவுடா பாட்டீல் – பசம்மா. தார்வாட் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி மற்றும் கர்நாடகா கல்லூரியில் கல்வி பயின்ற இவர், சிறந்த விளையாட்டு வீரர் ஆவார். மைசூர் மாகாண மாநில கிரிக்கெட் அணியிலும் விளையாடியுள்ளார். 1974-இல் அன்னபூர்ணா என்பவரை மணந்த இவருக்கு டாக்டர் பிரசாந்த் (மருத்துவர்), மிதுன் (பொறியாளர்) ஆகிய இரு மகன்களும், வர்ஷா என்ற ஒரு மகளும் உள்ளனர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது மூத்த சகோதரர் ஆர்.எஸ். பாட்டீல் முன்னாள் பாகல்கோட்டை எம்பி ஆவார். மற்றொரு சகோதரர் ஜி.எஸ். பாட்டீல் மாநில அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். இளைய சகோதரர் கே.சி.சி வங்கியின் தலைவராக இருந்துள்ளார். குழந்தைகள், பேரக்குழந்தைகள் என சுமார் 150 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குடும்பம் இவருடையது. 1983-இல் ரோணா நகராட்சி உறுப்பினராக பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர், 1989-இல் முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்வானார். 1989 முதல் 2023 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் ரோணா தொகுதியில் 8 முறை போட்டியிட்டு 4 முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ளார். சேமிப்புக் கிடங்கு நிறுவனத் தலைவர் (2001–2003), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத் தலைவர் (2018 வரை) ஆகிய பதவிகளை வகித்துள்ளார். தற்போது கனிம வள மேம்பாட்டுக் கழகத் தலைவராகப் பணியாற்றி, அப்பதவியை ராஜினாமா ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது