
ஜகார்த்தா, ஆக. 16- இந்தோனேசியாவின் வடமேற்கிலுள்ள எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து, அதே பகுதியில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 7.4 என ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்தோனேசிய தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 49 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து கிழக்கு நுசா தெங்கரா, தெற்கு சுலவேசி மற்றும் மேற்கு நுசா தெங்கரா மாகாணங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக கடலில் 1.6 அடி முதல் 9.8 அடி வரை அலைகள் மேலே எழும்பும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் இந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகின்றன. நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளும் பாதிப்படைந்து உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலநடுக்கம் காரணமாக பல நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் பலர் தங்கள் வீடுகளை விட்டு திறந்தவெளி இடங்களிலும், சாலையோரங்களிலும் தங்கியுள்ளனர். இந்தோனேசியாவில் கடந்த 1992-ல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 2,500 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் 2004-ல் ஏற்பட்ட சுனாமியால் இங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சுனாமியின்போது இந்தோனேசியாவில் சுமார் 1.72 லட்சம் பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.















