
ராஞ்சி, ஆக. 17- ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, காங்., வாபஸ் பெற வேண்டும் என, அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்திஉள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மூன்று தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்தும், மூன்று போட்டித் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும், மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து, 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு மூலம், சுதந்திரமான முறையில் விசா ரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிட்டால், அவரது அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் வாபஸ் பெற வேண்டும் என, மாணவர்கள் அமைப்புகள் தற்போது வலியுறுத்தியுள்ளன. மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்னதாக கசிந்த விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் டில்லியில் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததுபோல், தங்களுடைய போராட்டத்துக்கும் ராகுல் ஆதரவு அளிக்க வேண்டும் என, மாணவர்கள் அமைப்புகளின் தலைவர்கள் கூறியுள்ளனர். உருவ பொம்மைகளை எரித்து மாணவர்கள் போராட்டம்ஜா ர்க்கண்ட் மாநிலம் முழுதும், அரசு பணி நியமன தேர்வு முறைகேடுகளை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் உருவ பொம்மையை எரித்து, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்., கூட்டணி அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.













