Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் 800 கிலோஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

பெங்களூரில் 800 கிலோஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

பெங்களூரு: ஆக. 17-
பெங்களூருவில் கட்டிட கட்டுமானப் பணிக்காக பாறைகளை வெடிவைத்து தகர்க்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 800 கிலோ ஜெலட்டின் வெடிமருந்துகளை பெள்ளந்தூர் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெங்களூரு பெள்ளந்தூர் அருகே உள்ள போகனஹள்ளியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கான (MNC) கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த கட்டுமானப் பணியின் போது, அங்கிருந்த பாறைகளை உடைப்பதற்காக எவ்வித அரசு அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக அபாயகரமான ஜெலட்டின் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதாக பெள்ளந்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ எடையுள்ள ஜெலட்டின் வெடிமருந்துகளைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இந்த கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் ‘ஆதர்ஷ் டெவலப்பர்ஸ்’ நிறுவனம் மற்றும் அருண் குமார், ஜகன், பிரபாகர் ஆகியோர் மீது உரிய உரிமம் இன்றி வெடிமருந்துகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெள்ளந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட இந்த ஜெலட்டின் வெடிமருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டன? இவற்றைச் சேமித்து வைக்கவும் பயன்படுத்தவும் அரசிடம் அனுமதி பெறப்பட்டதா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.