Home தலைப்பு செய்தி திமுகவில் அதிரடி மாற்றம்

திமுகவில் அதிரடி மாற்றம்

சென்னை: ஆக. 22:
திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 110 ஆக உயர்வு முதல் கட்சிப் பதவிக்கான வயது வரம்பு, கால வரம்பு வரை நிர்ணயிக்கப்பட்டு 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முன்னதாக திமுக மறுசீரமைப்புக் குழுவானது பல்வேறு பரிந்துரைகளை தலைமைக் கழகத்துக்கு வழங்கியிருந்தது. அவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் இன்றைய தலைமைச் செயற்குழுவில் தீர்மானமாக முன்மொழியப்பட்டன.
அதன்படி திமுக செயற்குழுவில் முன்மொழியப்பட்ட 9 தீர்மானங்களின் விவரம் வருமாறு:
கிளைச் செயலாளர் – இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு!
திமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தற்போது மாநகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பாகத் திகழ்வது வட்டக் கழகங்கள். அதனை மேலும் வலிமைப்படுத்திட புதிய அமைப்பு ஒன்றின் தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், புதிய நிர்வாக அமைப்பாக மாநகர பகுதிகளில் கிளைக் கழகம் எனும் பிரிவு தொடங்கப்பட்டு, கிளைச் செயலாளர் எனும் பொறுப்பு உருவாக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர், அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்பானது ஏற்படுத்தப்படும். பிற மாநகராட்சிகளில் நிர்வாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.
நகர்ப்புறங்களில் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பானது மாநகரம் – நகரம் – பேரூர்க் கழகம் என்று இயங்கி வருகின்றன. மாநகர – நகர மற்றும் பேரூர்க் கழகக் கட்டமைப்புகளின் வலிமை மிக்க தூணாக விளங்குபவை வட்டக் கழகங்கள். சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரியாக பத்தாயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற மாநகரங்களில் சராசரியாக ஐந்தாயிரம் வாக்குகள் கொண்டதாக அமைய வேண்டும். அதுமட்டுமின்றி, மாநகர – நகர – பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் அப்பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
கிராமபுறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடைப்பட்ட அமைப்பு பேரூராட்சிகள். அந்தப் பேரூர்க் கழகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் பேரூர்க் கழகச் செயலாளராக அதிகபட்சமாக, இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
மாநகரங்களில் கழகத்தின் செயல்பாடுகளுக்கு அச்சாணியாக விளங்குவது பகுதிக் கழகங்கள். சென்னை மாநகராட்சியில் இனி அமையும் பகுதிக் கழகங்கள் 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், மற்ற மாநகரங்களுக்குச் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட பகுதி கழகங்களாகவும் அமைய வேண்டும். அப்படி உருவாக்கப்படும் பகுதிக் கழகங்களுக்கான செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அதிகபட்ச வயது 60 என்றும், அவர்கள் அதிகபட்சமாக இரு முறை அப்பொறுப்பில் பணியாற்ற முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகிவரும் மாநிலம் தமிழ்நாடு. நிர்வாக வசதிக்காக மக்கள்தொகை அடிப்படையில் நகரக் கழகங்களைப் பிரிப்பது இன்றியமையாததாகிறது. அதன் அடிப்படையில், சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். நகரக் கழகங்களின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என்று நிர்ணயிக்கப்படுவதுடன், நகரச் செயலாளராக ஒருவர் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
மாவட்டக் கழகங்கள் எனும் வலிமைமிக்க அமைப்புகளைத் தாங்கி நிற்கும் தூணாக விளங்குபவை ஒன்றியக் கழகங்கள். அவற்றை மேலும் வலிமை பொருந்திய அமைப்பாக மாற்றிட சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் ஒன்றியக் கழகச் செயலாளராக அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
ஊராட்சி ஒன்றியத்தை அடிப்படை அலகாகக் கொண்டு கழக ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். எந்தச் சூழலிலும் ஒரு ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு கழக ஒன்றியங்களுடன் இணைக்கப்படக் கூடாது.
ஒவ்வொரு கழக ஒன்றியமும் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் அமைந்திருக்க வேண்டும். ஒரு கழக ஒன்றியம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குள் இடம்பெறும் நிலை தொடரக் கூடாது என்று தீர்மானிக்கப்படுகிறது.