
ஜெய்ப்பூர்: ஆக. 22-
ராஜஸ்தானில் அரசுப் பள்ளியை பார்வையிட சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக தொடங்கப்பட்ட சி.ஜே.பி., எனப்படும், கரப்பான்பூச்சி கட்சி, ‘நீட்’ தேர்வு முறைகேட்டை எதிர்த்து டில்லியில் சமீபத்தில் போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அரசு பள்ளிகளை பார்வையிட்டு அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் பிரசாரத்தை கடந்த 15ல் அக்கட்சி தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கன்வார்புராவில் செயல்படும் அரசு பள்ளியை கரப்பான்பூச்சி கட்சியினர் நேற்று பார்வையிட சென்றனர். எருமை மாடுகள் அடைக்கப்படும் தொழுவத்தில் பள்ளி நடப்பதாக குற்றஞ்சாட்டிய அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் பள்ளிக்குள் நுழைய முயன்றனர்.அங்கிருந்த கிராம மக்கள் அவர்கள் பள்ளிக்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளியை சீரமைக்க 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர்கள், அதை கட்டுவதற்கான பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஒரு சிலர் கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவர்கள் சென்ற கார் சேதமடைந்தது. இந்த தாக்குதலுக்கு கரப்பான்பூச்சி கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.சம்பவம் குறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், ‘கரப்பான்பூச்சி கட்சியினரிடம் இருந்து எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை. பகவான் ராமர் குறித்து அவதுாறாக பேசியதுடன் இல்லாமல் நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது’ என, குற்றஞ்சாட்டினார்.













