
பெங்களூரு: ஆக. 22-
பெங்களூருவில் உயர் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் திடீரென மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரைத் தேடும் பணியில் நகர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர் எதற்காக மாயமானார், பின்னணியில் என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையப் பகுதியில் அந்த அதிகாரியின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதனிடையே, மாயமான ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கண்டுபிடித்து தருமாறு மூத்த அதிகாரி ஒருவர் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலையம் வரை அதிகாரியின் நடமாட்டத்தைக் கண்காணித்த போலீசார், அங்கிருந்து அவர் டெல்லி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
தற்போது குடும்பத்தினரின் தொடர்பிலும் அவர் இல்லை. முன்னதாக, இவர் கே.பி.எஸ்.சி. (கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவரது இருப்பிடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்த நிலையில், தற்போது அவர் மாயமாகியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி காணாமல் போன விபகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது . அவர் எங்கே இருக்கிறார் என கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது













