
நியூயார்க், ஆக. 24- அமெரிக்காவில் 2 இந்தியர்கள் வெவ்வேறு சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (28), அமெரிக்காவின் நியூயார்க்கில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரிச்மண்ட் ஸ்ட்ரீட் பகுதியில் பீட்சா டெலிவரி செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் குர்தீப் சிங்கை தாக்கி கொள்ளையடிக்க முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் குர்தீப் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள ஜாக்சன் நகரில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் பர்சோத்தம்தாஸ் (56) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிபார்மெண்ட்டல் ஸ்டோர் திறந்தார். கடந்த 20-ம் தேதி இரவு இந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர் சுரேஷை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றார். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அவர்களுடைய குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொல்லப்பட்ட இந்த 2 பேரின் உடலையும் விரைவாக தாயகம் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.














