
சிக்கமகளூர்: ஆக. 25-
திப்பு சுல்தான் கட்-அவுட்டுக்கு பாகிஸ்தான் ராணுவ பாடலை பின்னணியாக வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட வாலிபரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு திப்பு நகரைச் சேர்ந்தவர் ஆப்ரித் (வயது 23). இவர் அங்குள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவர் ‘சிக்கமகளூரு பவர் திப்பு பாய்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வந்தார்.
சமீபத்தில் மீலாது நபியை முன்னிட்டு, சிக்கமகளூரு நகரில் உள்ள இளைஞர்கள் சிலர் 40 அடி உயரத்தில் திப்பு சுல்தானின் பிரம்மாண்ட கட்-அவுட்டை வைத்திருந்தனர்.
இந்த கட்-அவுட்டை வீடியோ எடுத்த ஆப்ரித், அதற்கு பாகிஸ்தான் ராணுவத்தைப் போற்றும் பாடலை பின்னணி இசையாகச் சேர்த்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்.
எதிரி நாட்டின் ராணுவப் பாடலைப் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டதற்கு உள்ளூர் மக்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, சிக்கமகளூரு நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தனராஜ் இதுகுறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். தேசவிரோத நடவடிக்கைகள் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 299, 196, 197 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆப்ரிதை கைது செய்த போலீசார், அவரை தீவிர விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.













