
வாஷிங்டன்: ஆக. 25-
அமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள மற்றும் தற்போது வசித்து வரும் 2 லட்சம் வெளிநாட்டினரின் வணிக மற்றும் சுற்றுலா விசாக்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்யத் தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக குடியுரிமை நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது 2 லட்சம் வெளிநாட்டினரின் வணிக மற்றும் சுற்றுலா விசாக்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்யத் தயாராகி வருகிறது.
அமெரிக்க வரலாற்றில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய விசா ரத்து நடவடிக்கையாக இது அமையக்கூடும். இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாவிட்டாலோ அல்லது அது திருத்தப்படாவிட்டாலோ, வரும் வாரங்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த நடவடிக்கையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 முதல் 2026 காலகட்டத்தில் B1 மற்றும் B2 சுற்றுலா விசா பெற்றவர்கள், குறுகிய கால விசாக்களில் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டு, பின்னர் அகதி நிலை கோரி விண்ணப்பிக்கும் முறையைத் தடுத்தல் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. விசா ரத்து செய்யப்பட்டாலும் உடனடியாக நாடு கடத்தப்பட மாட்டார்கள்; எனினும் வணிக அல்லது சுற்றுலாப் பயணி என்ற தகுதியை அவர்கள் இழப்பார்கள். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் கூறியதாவது:குறுகிய கால தங்குவதற்கு என்று கூறி அமெரிக்காவிற்கு வந்து, பின்னர் இங்கு நிரந்தரமாகத் தங்குவதற்காகத் தஞ்சம் கோரும் வெளிநாட்டினரைக் கண்டறிந்து, அவர்களின் விசாக்களை ரத்து செய்ய நாங்கள் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு டாமி பிகாட் கூறினார்.













