Home மாவட்டங்கள் பெங்களூர் பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு

பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு

பெங்களூரு, செப். 1- கர்நாடகா அரசு அண்மையில் பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2026-ஐ நிறைவேற்றியது. இதன்படி, பூங்காக்களின் 5% பகுதியை அரசு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ, பரிசாக வழங்கவோ, அடமானம் வைக்கவோ இயலும். இதனால், லால் பாக் பூங்காவின் 12 ஏக்கர் மற்றும் கப்பன் பூங்காவின் 15 ஏக்கர் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அரசு தரப்பில் இது அரசு துறைகள், சட்டப்பூர்வ அமைப்புகள், அரசு நிறுவனங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் பொதுப் பயன்பாட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது ரியல் எஸ்டேட் பணிகளை ஊக்குவிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பெங்களூரு மாநகர போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, ஹெப்பால் ஜங்ஷனில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரை 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல்வர் சிவகுமார் அதிக ஆர்வம் காட்டுகிறார். இந்த சுரங்கச் சாலை, லால்பாக் பூங்காவின் கீழ் 100 அடி ஆழத்தில் அமைக்கப்படும். இதற்காகத்தான் புதிய சட்டம் கொண்டுவந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பொதுமக்கள் கண்டனம் ஒருபுறம் இருக்க, பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.