Home செய்திகள் உலக செய்திகள் பரிட்சை எழுதிய மாணவி கண்ணீர்

பரிட்சை எழுதிய மாணவி கண்ணீர்

காத்மாண்டு, செப். 1- நேபாள வெள்ளத்தில் சிக்கிய கைலாஷ் யாத்திரைக் குழுவிலிருந்து தன் பெற்றோரை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மாணவி தன்வி கண்ணீரை அடக்கிக்கொண்டு நீட் பிஜி தேர்வை எழுதிய சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.நேபாள வெள்ளத்தில் கைலாஷ் யாத்திரைக் குழு சிக்கியதால் பெற்றோரைத் தவறவிட்ட நிலையில், மருத்துவப் படிப்பு பயில விரும்பிய மாணவி தன்வி ஒருவர் நீட் பிஜி 2026 தேர்வை எழுதினார். ஆகஸ்ட் 30ம் தேதி தேர்வெழுதிய தன்வி, மூன்று மணி நேரத் தேர்வின் பாதி நேரத்தை கண்ணீரில் கழித்ததாக உருக்கமாக தெரிவித்தார். அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: மூன்று மணி நேரத் தேர்வில், ஒன்றரை மணி நேரம் நான் அழுதுகொண்டே இருந்தேன். என் அப்பா நான் இந்தத் தேர்வை எழுத வேண்டும் என்று விரும்பினார். அவருக்காகவும் என் பெற்றோருக்காகவும் நான் இந்த தேர்வை எழுதினேன்.தேர்வை விட, தேர்வுக்கு முன்பு என் அம்மா எப்போதும் எனக்குத் தயிரும் சர்க்கரையும் கொடுப்பார் என்பதுதான் மிகவும் கடினமான இருந்தது. இந்த முறை நான் தேர்வு எழுத சென்ற போது எனது அம்மா அதனை தரவில்லை.அவர் வெள்ளத்திற்கு பிறகு காணவில்லை. இவ்வாறு உருக்கமாக தன்வி கூறினார். அவர் வீடியோ இறுதியில் கண்ணீரைத் துடைத்தவாறே, பெற்றோர் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தன்வியின் பெற்றோர்களான வெங்கட்ராம் அன்னம்தேவரா மற்றும் அனகா அன்னம்தேவரா ஆகியோர் 67 பேர் கொண்ட குழுவுடன் கைலாச யாத்திரை மேற்கொண்டிருந்தனர். நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது இவரது பெற்றோர்கள் 67 பேர் கொண்ட குழுவுடன் கைலாஷ் யாத்திரையில் இருந்தனர். வெள்ளத்தில் சிக்கிய இவர்கள் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இதனால் தன்வி மிகவும் கவலை அடைந்துள்ள நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.