
புதுடெல்லி: செப். 7-
பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆக்கிரமித்து வரும் சூழ்நிலையில், மென்பொரியாளர்கள் தங்கள் திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு, சோஹோ நிறுவனர், அறிவுரை வழங்கியுள்ளார்.
அவரது கருத்துப்படி, ஏஐ தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக மென்பொருள் உருவாக்கம் (கோடிங்) சார்ந்த பணிகள் மாறி வருகின்றன. இச்சூழலில் துறை சார்ந்த வல்லுநர்கள் தங்கள் திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் தங்கள் தேவையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஏஐ தொழில்நுட்பம் மிக விரைவாக கோடிங் உருவாக்கும் திறனைப் பெற்று வருகிறது.
வழக்கமான கோடிங் பணிகளின் தேவை குறைந்து வருகிறது. எனவே, மென்பொருள் பொறியாளர்கள் வெறும் கோடிங் சார்ந்து எழுதுவதோடு நிறுத்திவிடாமல், சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, கட்டமைப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மாறிவரும் தொழில்நுட்ப உலகுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ளாதவர்கள் துறையில் தொடர்வது அவர்களுக்கு பெரும் சவாலாக அமையும். தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வவர்களுக்கே எதிர்காலத்தில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.













