
புதுடெல்லி: செப். 7-
யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளின் புதிய துணைநிலை கவர்னராக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் துணைநிலை கவர்னர்,
ஓய்வு பெற்ற அட்மிரல் டி.கே. ஜோஷி 2017 அக்டோபர் 6 முதல் பதவி வகித்து வந்தார்.
தினேஷ் சர்மாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 25 அன்று முடிவடைகிறது. சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவில், “என்னை நியமித்த ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. இந்த புதிய பொறுப்பு வெறும் பதவியல்ல, மாறாக, நம் அரசியலமைப்பு சட்டம், நாடு மற்றும் மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பு. இந்த கடமையை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், தேச பக்தியுடனும் நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்தார்.
இந்த நியமனம், அந்தமான் நிகோபார் தீவுகளின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













