Home செய்திகள் உலக செய்திகள் மாஸ்கோவில் இந்திய பொறியாளர் கைது: மனைவி குற்றச்சாட்டு

மாஸ்கோவில் இந்திய பொறியாளர் கைது: மனைவி குற்றச்சாட்டு

மாஸ்கோ, செப். 8- ரஷ்ய காவல்துறை மாஸ்கோவில் கைது செய்துள்ள கான்பூரைச் சேர்ந்த இந்திய பொறியாளர் சந்தன் குப்தாவை, ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்க முயற்சி நடப்பதாக அவரது மனைவி ஸ்நேகா குப்தா குற்றம் சாட்டியுள்ளார். கான்பூரைச் சேர்ந்த சந்தன், ஃபிளெக்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மாஸ்கோ கிளையில் பணியாற்றி வருகிறார்.
செப்டம்பர் 5 அன்று மாஸ்கோவின் சிவப்பு சதுக்க பகுதியில், பொது இடத்தில் மது அருந்தி, ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்ததாக சந்தன் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் இருவரையும் ரஷ்ய காவல்துறை கைது செய்தது. எந்த தவறும் செய்யாதவரை கைது செய்துள்ளதாக ஸ்நேகா குப்தா கூறியுள்ளார். உக்ரைன் போரில் பங்கேற்க ரஷ்ய ராணுவத்தில் சேருமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது கணவரை பாதுகாப்பாக மீட்க பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதும் உடனடியாக தலையிட வேண்டும் என ஸ்நேகா கண்ணீருடன் காணொலி மூலம் வேண்டுகோள் விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், சந்தன் குப்தா மற்றும் ஆஷிஷை விடுவிக்க உள்ளூர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றது. அவர்களை சந்திக்க அனுமதி கோரியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. நல்ல வேலை தருவதாகக் கூறி ரஷ்யாவுக்கு அழைத்து செல்லப்பட்ட இந்தியர்கள், கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர் என்று கூறப்படும் சூழலில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுவரை ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 227 இந்தியர்களில் 139 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 51 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ளவர்களை மீட்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.