Home மாவட்டங்கள் பெங்களூர் காப்பாற்ற முயன்ற வனத்துறை ஊழியரை தாக்கிய சிறுத்தை

காப்பாற்ற முயன்ற வனத்துறை ஊழியரை தாக்கிய சிறுத்தை

தாவணகெரே: செப்.9-
தாவணகெரே அருகே உள்ள கொக்கனூர் கிராமத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை 48-ல், நேற்று இரவு சிறுத்தை ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்த சிறுத்தை, சாலையோரப் பள்ளத்தில் விழுந்து இரவு முழுவதும் வலியால் துடித்தது.
இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை உதவி வனப் பாதுகாவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஹம்பியில் இருந்து வந்த மருத்துவக் குழுவினருடன் இணைந்து வனத்துறை ஊழியர்கள் இன்று காலை 9 மணியளவில் சிறுத்தையை மீட்க முயன்றனர். அப்போது மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த சிறுத்தை, வனத்துறை ஊழியர் மீது பாய்ந்து தாக்கியது.
தாக்குதலில் காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிறுத்தைக்கு இரண்டாவது மயக்க ஊசி செலுத்தப்பட்டு பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. தற்போது அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.