
புதுடெல்லி, செப். 8- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதில், தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதற்கான ஊழல் புகார் வழக்குகளின் தொடர்பில்,
அரசு தரப்பு சிறப்பு வக்கீல் பி.வாஷிங்டன் தனசேகரன் மாற்றப்பட்டு, வி.செந்தில் முருகன் நியமிக்கப்பட்டது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, அரசு தரப்பு சிறப்பு வக்கீலை மாற்றி அமைக்க உரிமை கிடையாது. அரசு தரப்பில் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிற சிறப்பு வக்கீல், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக நியமிக்கப்படுவதில்லை. எனவே, குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஆலோசனையை அரசு கேட்க தேவையில்லை. இதற்கான முழுப்பாதுகாப்பு அதிகாரம் அரசுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. வி.செந்தில் முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பிரமாண பத்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












