Home மாவட்டங்கள் பெங்களூர் நீக்கப்பட்ட கே.பி.எஸ்.சி தலைவர் வீட்டில் 2-வது நாளாக சி.ஐ.டி. சோதனை

நீக்கப்பட்ட கே.பி.எஸ்.சி தலைவர் வீட்டில் 2-வது நாளாக சி.ஐ.டி. சோதனை

பெங்களூர்: செப். 9-
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி.) நியமன முறைகேடு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தலைவர் சிவசங்கரப்பா எஸ். சாஹுகாரின் பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் சி.ஐ.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சாஹுகாரின் வீடு மட்டுமின்றி அவரது உறவினர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நீடித்தது.
நேற்று தொடங்கிய இந்த சோதனையானது 2-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். இந்த வழக்கில் சாஹுகார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகள் திட்டமிட்ட மோசடியை சுட்டிக்காட்டுவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது. இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்தால் அரசு அமைப்புகளின் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழக்க நேரிடும் என்றும், திறமையான மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது.
தேர்வு ஆவணங்கள் மற்றும் ஓ.எம்.ஆர். தாள்களில் முறைகேடாக மாற்றம் செய்தது, இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாஹுகார் உட்பட மற்ற குற்றவாளிகளின் பங்களிப்பு குறித்தும் விசாரணை தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கால்நடை மருத்துவர்கள் நியமன பணியில் 24 வேட்பாளர்கள் பணம் கொடுத்து பணியைப் பெற்றுள்ள அதிர்ச்சி தகவலை சி.ஐ.டி. விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது. தேர்வுக்கு முன்னதாகவே 24 வேட்பாளர்களிடம் முன்பணம் பெற்று தனியாக பயிற்சி அளித்துள்ளனர். ஒரு வேட்பாளரிடம் ரூ.20 லட்சம், ரூ.40 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை என மொத்தம் ரூ.12 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
திரட்டப்பட்ட பெரும்பகுதி பணம் ரொக்கமாகப் பெறப்பட்டது. குற்றவாளி பசவராஜின் வங்கிச் கணக்கில் வேட்பாளர்கள் சுமார் ரூ.75 லட்சத்தை நேரடியாகச் செலுத்தியுள்ளனர். இந்தப் பணம் பீதரில் உள்ள கூட்டுறவு வங்கிச் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, வங்கிச் கணக்கில் இருந்த ரூ.75 லட்சம் ரொக்கம் மற்றும் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை சி.ஐ.டி. அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.