
மண்டியா, செப். 10-
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா சாரங்கி கிராமத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் உண்டு உரைவிடப் பள்ளியில், நச்சு உணவு உண்டு 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்டு உரைவிடப் பள்ளியில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, மாணவர்களுக்குத் திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. அவர்களின் உடல்நிலை வேகமாக மோசமடைந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின் மாணவர்களின் உடல்நிலை சீரடைந்தது. சிகிச்சை முடிந்ததும் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக விடுதிக்குத் திரும்பினர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், கே.ஆர்.பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.டி. மஞ்சு மருத்துவமனை மற்றும் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களிடம் நலம் விசாரித்தார். மாணவர்களுக்குச் தரமான சிகிச்சையும், ஊட்டச்சத்துள்ள உணவும் வழங்க உத்தரவிட்ட எம்.எல்.ஏ, உணவு விஷமானதற்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தாலுகா அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.













