Home மாவட்டங்கள் பெங்களூர் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

பாகல்கோட்டை, செப். 10:
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகர் பாம்பே காலனி பகுதியைச் சேர்ந்தவர் மெஹபூப் பி (வயது 27). 2 குழந்தைகளின் தாயான இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அந்த வாலிபர் மெஹபூப் பியிடம் போனில் பேசுவதை நிறுத்தியுள்ளார். மேலும், மெஹபூப் பி பலமுறை போன் செய்தும் அதை அவர் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மெஹபூப் பி, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். தூக்குப்போடுவதற்கு முன்பாக காதலனுக்கு ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், “நீ என்னிடம் பேசாவிட்டால் தூக்குப்போட்டு செத்துவிடுவேன்.
நான் தூக்கில் தொங்குவதை வீடியோ எடுத்து உனக்கும், மற்றவர்களுக்கும் அனுப்புவேன். உன் பெயரையும் எழுதி வைத்துவிட்டு சாகப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.
கூறியபடியே, தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் கொடூர காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பிவிட்டு மெஹபூப் பி தூக்கில் தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகல்கோட்டை நவ்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.