
பெங்களூரு: செப். 12-
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காததால் சப்-இன்ஸ்பெக்டர் மீது ‘பேப்பர் வெயிட்’ வீசித் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐ.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி விகாஸ் குமார் விகாஷ் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கீழமை நீதிமன்றம் அவருக்கு வழங்கிய சம்மனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதி ரவி வி. ஹோஸ்மனி அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
சம்பவம் என்ன?
கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. சிக்கமகளூரில் நடத்தப்பட்ட காவல் துறை விளையாட்டுப் போட்டியில் மல்லந்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜி.எஸ். சந்திரசேகர் பங்கேற்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அன்றைய சிக்கமகளூர் எஸ்பியான விகாஸ் குமார் விகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரைத் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அவர் மீது பேப்பர் வெயிட்டை வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சந்திரசேகரின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கையை தாக்கல் செய்தனர். ஆனால் கீழமை நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமார் நேரில் ஆஜராகி விசாரணை எதிர்கொள்ள வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளதால், ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமாருக்கு சட்ட ரீதியான நெருக்கடி முற்றியுள்ளது.













