Home செய்திகள் உலக செய்திகள் 41 ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கன் தகவல்

41 ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கன் தகவல்

காபூல்: அக். 1-
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படும் 41 பேர் தங்கள் படைகளால் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணத்தின் கம்தேஷ் மாவட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றன. அவற்றைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 62 பேர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) அமைப்பைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தேசியப் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் எந்தவொரு தரப்பினரையும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சகம் கூறியுள்ளது. மீண்டும் இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதைவிடக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் ஆதரவுடன் ஊடுருவல்காரர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் வந்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.எல்லைப் பகுதியில் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகள், ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் உறவில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீடித்து வருகிறது.