
பெங்களூரு: அக். 6-
பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக, கொரகுண்டேபாளையா சிக்னல் அருகே இன்று அதிகாலை 5.30 மணி அளவில் பிரம்மாண்ட மரம் ஒன்று லாரி மீது முறிந்து விழுந்தது. அப்போது சிக்னலில் நின்றுகொண்டிருந்த 2 கார்கள் அதிர்ஷ்டவசமாக தப்பின. லாரி டிரைவரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
மரம் விழுந்ததால் கொரகுண்டேபாளையா வெளிவட்ட சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சும்மனஹள்ளி – துமகூரு பிரதான சாலையை இணைக்கும் பாதையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்களும் போக்குவரத்து போலீசாரும் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு முதல் நகரம் முழுவதும் பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
















