
பெங்களூரு: அக். 6-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 11-ம் தேதி தொடங்கி, 21-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. கர்நாடக அரசு சார்பில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று மைசூருவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். விழாவின் 10 நாட்களிலும் நடத்தப்பட வேண்டிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
டி.கே.சிவகுமார் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் தசரா விழா என்பதால், இதனை மிகவும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. விழா ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் நடைபெறும் விமானக் கண்காட்சியைத் தொடங்கி வைக்குமாறு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மைசூரு தசரா விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் விரைவில் தமிழக முதல்வர் விஜயை தொலைபேசியில் தொடர்புகொண்டு விழாவுக்கு அழைப்பு விடுப்பார் என மைசூரு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















