
விசாகப்பட்டினம், அக். 7-
கடந்த 2025 நவம்பரில் நடைபெற்ற முதல் பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தீபிகா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. இந்தியாவுக்கு பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக்கோப்பையை வென்று தந்து ஓராண்டு கடந்த நிலையிலும், அணியில் இடம்பெற்ற 16 வீராங்கனைகளுக்கு அரசு அறிவித்த வேலைவாய்ப்பும் இலவச வீட்டு மனையும் கிடைக்கவில்லை. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, 16 வீராங்கனைகளுக்கும் அரசு வேலை மற்றும் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்று அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் நிகழ்ச்சிகளில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஓராண்டு ஆகியும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் தீபிகா கூறுகையில், “எங்களுக்குப் பார்வைக் குறைபாடு உள்ளதால் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து சென்று அதிகாரிகளைச் சந்திக்க முடியவில்லை. அரசே முன்வந்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, எங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்” என்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 45 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தவர் தீபிகா. மற்றொரு வீராங்கனையான கருணா குமாரி, தனது குடும்பத்தைக் காப்பாற்ற அரசு வேலை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அசாம், ஒடிசா, மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இந்த வீராங்கனைகள் 16 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள். அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உள்ளூரில் முறையான மைதான வசதியோ பயிற்சியோ கிடைப்பதில்லை. இதற்கிடையில், ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பு நிதியில் இருந்து ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கியுள்ளது. வரும் டிசம்பர் 2026-ல் நேபாளத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
















