
புதுடெல்லி, நவ. 3- தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர்கள், அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வருமான சுனேத்ரா பவாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்துப் பேசினர்.மகாராஷ்டிர துணை முதல்வர் சுனேத்ரா பவாரிடம் கலால், விளையாட்டு, இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகள் உள்ளன. தமது கணவர் அஜித் பவார் இதற்கு முன்பு வகித்து வந்த நிதித் துறையை தனக்கு வழங்க வேண்டும் என்று அவர், மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் தனது மகன் பார்த் பவாரை நியமிக்கவும் சுனேத்ரா பவார் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்த விவகாரத்தில் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தி, சுனேத்ரா பவாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், சுனில் தாட்கெரே, தனஞ்ஜெய் முண்டே உள்ளிட்டோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, சுனேத்ரா பவாரிடம் உள்ள துறைகள், நிதித் துறையைப் பெற அவர் மேற்கொண்டு வரும் முயற்சி, கட்சித் தலைவர் பதவிக்கு பார்த் பவாரை முன்னிறுத்தும் நடவடிக்கை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன் பார்த் பவார் தொடர்பான விவகாரங்கள் குறித்து அமித் ஷாவிடம் என்சிபி மூத்த தலைவர்கள் தங்களது புகார்களை நேரில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு, கட்சிக்குள் நிலவி வரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













