
சென்னை, நவ. 3-
வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் சென்னை கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து, வழக்கத்தைவிட அதிக உயரத்தில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்து மோதுகின்றன. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், பொதுமக்கள் கடற்கரைகளில் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்கவோ, நீந்தவோ சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. அலைகள் வந்து மோதும் பகுதிகளுக்கு அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைகளை கடலுக்கு அருகே சென்று விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதற்காக ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரும் உயிர்காப்புப் பணியாளர்களும், கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலை குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கடற்கரைக்குச் செல்லும் மக்கள், அலைகள் கரையை நோக்கி வேகமாக மோதும் பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.காற்று வேகமாக வீசி வரும் சூழலில், தேவையற்ற கடற்கரைப் பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அவசர காலங்களில் காவல்துறையின் உதவி தேவைப்பட்டால் 100 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.முரசு புயல் காரணமாக சென்னையில் 5 விமானங்களின் புறப்பாடுகளும், 6 விமானங்களின் வருகைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் மொத்தம் 11 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













