
சென்னை, நவ. 3-
தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி தேசிய சராசரியைவிடக் குறைந்துள்ளதாகவும், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி மதிப்பிலான கொரிய முதலீடுகள், தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. எல்லா துறைகளிலும் இவ்வளவு வேகமாக ‘ரிவர்ஸ் கியரில்’ செல்வது எப்படி என்பதை இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.மேலும், இந்த விவரங்கள் எதுவும் தெரியாத முதல்வர், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கையசைத்து ‘ஷோ’ காட்டக் கிளம்பிவிட்டதாகவும், தவெக ஆட்சியின் கீழ் தமிழகம் அதலபாதாளத்துக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியைவிட மிகக்குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது. மறுபுறம், தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் அனைத்தும் ஆந்திராவுக்குச் சென்று கொண்டிருக்கின்றன’’ என்று தெரிவித்துள்ளார். தனி நபர் வருவாய் உயர்ந்தால்தான் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்ட பழனிசாமி, நிர்வாகம் குறித்து புரிதல் இல்லாமல், ‘ரீல்ஸ்’ காண்பித்து முதல்வராகிவிட்டால் மட்டும் அனைத்தும் தானாக நடந்து விடுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கென கடினமாகக் கட்டமைக்கப்பட்ட வளர்ச்சிப் பாதையை பாழாக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.













