
சென்னை, நவ. 3-
திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவறான சிகிச்சை காரணமா என கொடுங்கையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாதவரம் பால்பண்ணை மூலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (26). இவருக்கு மது பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அவருக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மது பழக்கத்திலிருந்து அவரை மீட்பதற்காக, லோகேஷை அவரது பெற்றோர் கடந்த 29-ம் தேதி மூலக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்த செவிலியர் ஒருவர் லோகேஷுக்கு ஊசி செலுத்தியதாகத் தெரிகிறது.
ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே அவரது உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது மருத்துவமனையில் டாக்டர்கள் யாரும் இல்லை எனத் தெரிகிறது. இதையடுத்து,
செவிலியர் ஆம்புலன்ஸை வரவழைத்து, லோகேஷை மாதவரத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.இதற்கிடையே அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், லோகேஷை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், லோகேஷ் உயிருடன் இருப்பதாகவும், தாங்கள் பரிசோதித்துவிட்டதாகவும் செவிலியர் கூறியுள்ளார். பின்னர், அவரை ஆம்புலன்ஸில் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு லோகேஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் மீண்டும் சம்பந்தப்பட்ட நர்சிங் ஹோமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.













