Home செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களுக்கு சைபர் தாக்குதல்

ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களுக்கு சைபர் தாக்குதல்

ரோம்: நவ. 3-
ஐரோப்பாவின் சுமார் 9 நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் அங்காடிகளின் ஃபிரிட்ஜ்கள் மற்றும் குளிரூட்டும் சாதனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெல்ஜியம், பின்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன், எஸ்தோனியா ஆகிய நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்கள், ஃப்ரீஸர்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட ஷெல்ஃப்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இதனால் அவற்றின் வெப்பநிலை உயர்ந்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கெட்டுப்போனதாக கூறப்படுகிறது. அந்தப் பொருட்களை வணிகர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மூன்று வாரங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிலும் இதேபோன்ற தாக்குதல் சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்கள் மீது நடத்தப்பட்டது. தற்போது இந்தப் போக்கு ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது. பிரான்ஸ் சம்பவம் உள்பட எந்தத் தாக்குதலுக்கும் இதுவரை எந்த அமைப்போ,
தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.
இத்தாலியில் அதிகாலை 4 மணியளவில் தாக்குதல் நடந்ததாக, ‘Coop’ பிராண்டில் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தும் ராடென்சா குழுமம் தெரிவித்துள்ளது. குளிரூட்டப்பட்ட உணவுப் பிரிவின் ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு குறிவைக்கப்பட்டதாக அந்தக் குழுமம் கூறியுள்ளது.
பெல்ஜியத்தில் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அயர்லாந்தில் 13, போர்ச்சுகலில் 7, ஸ்வீடனில் 6 அங்காடிகள் பாதிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தகவல் வெளியிடாத நிறுவனங்களின் விவரங்கள் தெரியவந்த பின்னரே மொத்த பாதிப்பு கணக்கிடப்படும்.
தாக்குதலுக்குள்ளான சாதனங்களின் ரிமோட் கண்ட்ரோல் மென்பொருளை டென்மார்க்கைச் சேர்ந்த Danfoss நிறுவனம் வடிவமைத்து வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சாதனங்கள் பழைய மாடல்கள் எனவும் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உணவு மற்றும் வேளாண் துறை ஆணையர் கிறிஸ்தோப் ஹன்சன், இது உணவு விநியோகச் சங்கிலியையும் நுகர்வோர் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.