Home செய்திகள் உலக செய்திகள் கடத்தப்பட்ட ஈரான் கப்பல்: 20 மாலுமிகள் மீட்பு

கடத்தப்பட்ட ஈரான் கப்பல்: 20 மாலுமிகள் மீட்பு

அரபிக்கடல்: நவ. 3-
சோமாலியாவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் ஆயுதமேந்திய 12 சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி கடத்தப்பட்ட ஈரான் மீன்பிடிக் கப்பல் ‘அசினி’யை, இந்தியக் கடற்படை 48 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்டது.
கப்பலில் இருந்த 20 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடல் பகுதியில் இந்தக் கப்பல் இடைமறிக்கப்பட்டது. இந்தியக் கடற்படையும், இந்திய விமானப்படையும் இணைந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
கடத்தப்பட்ட கப்பல் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்தியப் பாதுகாப்புப் படைகள் நடவடிக்கையில் ஈடுபட்டன. நீண்ட நேரம் நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பிறகு, கப்பலும் அதில் இருந்த மாலுமிகளும் இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றிய இந்தியக் கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “நமது துணிச்சலான வீரர்கள், உயிர்களைப் பாதுகாப்பதிலும், கடல்சார் பாதுகாப்பை நிலைநாட்டுவதிலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதிலும் இந்தியாவின் திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“பாதுகாப்பான கடல் சூழலை உறுதி செய்வதிலும், சுதந்திரமான, பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதிலும் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயல்படுகிறது. கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் திறனை இந்தியக் கடற்படை வெளிப்படுத்தியுள்ளது” என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.