
தெஹ்ரான்: நவ. 3-
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க, அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது. இந்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டால், அடுத்த 2 நாட்களுக்குள் நீரிணை திறக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத் தகவல்களின்படி, மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகை மற்றும் விதித்துள்ள தடைகள் முழுமையாக விலக்கப்பட வேண்டும். ஈரானின் எண்ணெய்த் துறை மீதான தடைகள் நீக்கப்பட்டு, எண்ணெய் வர்த்தகத்துக்கான விலக்குகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள புதிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதையை அமெரிக்கா ஏற்க வேண்டும். மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஈரான் கோரியுள்ளது. அணுசக்தித் திட்டம் தொடர்பான விவாதங்கள், போர் முடிவடைந்த பின்னரும், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு அமெரிக்காவின் முற்றுகை விலக்கப்பட்ட பின்னருமே நடத்தப்பட வேண்டும் என்பதும் ஈரானின் மற்றொரு நிபந்தனையாகும். இந்த 7 நிபந்தனைகளுக்கும் அமெரிக்கா ஒப்புதல் அளித்தால், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.













