
மும்பை: நவ. 3-
மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் போக்கர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் 27 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல், பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கொள்ளை கும்பல் திடீரென வங்கிக்குள் புகுந்தது. அங்கிருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல், வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 27 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை 5 பைகளில் அள்ளியது. பின்னர், மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றது.
கொள்ளையர்கள் வங்கியில் இருந்து வெளியேறியதும், உஷாரான ஊழியர்கள் அவசரகால அபாய எச்சரிக்கை மணியை அழுத்தினர். அதன் சத்தம் கேட்டு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் கொள்ளையர்களைத் துரத்திச் சென்றனர். விடாமல் பின்தொடர்ந்த கிராம மக்கள், கொள்ளையர்கள் 4 பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.













