Home செய்திகள் தேசிய செய்திகள் விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றச் சென்றவர்கள் மீது லார மோதி 7 பேர் பலி

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றச் சென்றவர்கள் மீது லார மோதி 7 பேர் பலி

கும்லா/ராஞ்சி,நவ.6-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டிக்கு உதவச் சென்ற பொதுமக்கள் மீது, அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம், கர்ரா காவல் எல்லைக்குட்பட்ட கர்ரா-தோர்பா முதன்மைச் சாலையில் வியாழக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. ஜோன்-லுத்ரு வளைவு அருகே ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து புதரில் விழுந்து விபத்துக்குள்ளானார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காயமடைந்த ஓட்டுநருக்கு உதவ உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது தோர்பா பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த  என்ற பதிவு எண் கொண்ட லாரி ஒன்று, சாலையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது எதிர்பாராதவிதமாகப் பாய்ந்து ஏறியது. லாரியின் அதிவேகம் காரணமாகப் பொதுமக்கள் தப்பியோடக்கூட நேரம் கிடைக்கவில்லை. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்து வந்த கர்ரா காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு குந்தி சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும் படுகாயமடைந்த குஷ்பூ குமாரி என்ற பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இக்கொடூர விபத்தில் பாகோ தேவி, கசிலா தேவி, மனு தேவி, கோலு குமார், அஞ்சலி குமாரி, டுடி குமாரி மற்றும் சௌரப் நாயக் ஆகிய 7 பேர் உயிரிழந்ததாகக் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், அதிவேகமாகவும் இலட்சியத் தனமாகவும் லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரைத் தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபத்தையும், காயமடைந்த பெண் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மனிதநேயத்துடன் உதவச் சென்ற பொதுமக்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.