Home மாவட்டங்கள் சென்னை தீபாவளியையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளியையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொள்ளாச்சி: நவ.6-

தீபாவளி பண்டிகையையொட்டி பொள்ளாச்சி ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்ததுடன், விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற சந்தைக்கு பொள்ளாச்சி, பல்லடம், அன்னூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து செம்மறியாடுகள், வெள்ளாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், வழக்கத்தைவிட அதிகளவில் ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள மாநிலத்தின் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் சந்தையில் ஆடுகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் அதிகளவில் ஆடுகள் வந்தன. மொத்தம் சுமார் 700 முதல் 800 ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 5 கிலோ முதல் 30 கிலோ வரையிலான எடையில், தரத்துக்கு ஏற்ப ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும், 25 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. தீபாவளியையொட்டி ஆடுகளின் வரத்து அதிகரித்தபோதிலும், விலை குறையவில்லை. மேலும், வழக்கத்தைவிட அதிகளவில் வியாபாரிகளும் பொதுமக்களும் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.