
சென்னை: நவ. 14-
பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான தி.நகர் கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
நாட்டுக்குத் தேவையான முக்கியமான பிரச்சினை குறித்து பேசியதால்தான் தனது அறிக்கை முரசொலியில் வெளியிடப்பட்டதாகவும், அதே அறிக்கை மற்ற நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். முரசொலியில் வெளியானதை மட்டும் ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய அவர், இதை வைத்து திமுகவும் பாஜகவும் இணக்கமாகச் செயல்படுகிறதா எனக் கேட்பதைவிட, நாட்டில் உள்ள பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்றார்.
திமுக ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்களைவிட தற்போது அதிகமான குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், தீஎந்தக் காரணத்துக்காக திமுக ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதோ, அதே நிலைதான் தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.
தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து வருவதாகக் கூறிய அவர், ஒவ்வொரு வீட்டிலும் பெண்களும் பெண் குழந்தைகளும் இருப்பதால், இதுபோன்ற விவகாரங்களில் முதல்வர் ஏன் மவுனம் காக்கிறார் எனக் கேள்வி எழுப்பினார். மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பவில்லை என மாணிக்கம் தாகூர் கூறுவது ஏன் என்றும், அவர் ஏன் அந்த எம்எல்ஏவுக்கு வக்காளத்து வாங்குகிறார் என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ் பேசுகையில், 1967-ம் ஆண்டிலேயே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும், அதன்பிறகு பிற கட்சிகளின் ஆதரவில்தான் அக்கட்சி அரசியல் நடத்தி வருவதாகவும் கூறினார்.















