
சென்னை: நவ. 13-
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று காலை தொடங்கினார். சென்னை கொளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அவர் கேக் வழங்கினார்.
சென்னை – கொளத்தூர் மடுமா நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு முதல்வர் விஜய் கேக் வழங்கினார். அந்த பள்ளியின் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் அவர் கேக் வழங்கினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது பள்ளி மாணவர்களில் சிலர் தேசத் தலைவர்கள் வேடம் அணிந்து வந்திருந்தனர். அவர்களுடன் முதல்வர் விஜய் பேசி மகிழ்ந்தார். மேலும், மழலையர் பள்ளி மாணவர்களில் சிலருக்கு கேக் ஊட்டினார் முதல்வர் விஜய்.
பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் விஜய், கேக் வழங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கேக் வழங்கும் பணிகள் தொடங்கின. மாவட்ட வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த பணியை மேற்கொண்டுள்ளதாக தகவல்.
நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நடப்பாண்டு பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவுடன் கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கடந்த அக்டோபர் 11-ம் தேதி ரூ.9.27 கோடி மதிப்பில் குறுகிய கால டெண்டர் வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் 4 பிரபல நிறுவனங்களுக்கு கேக் விநியோக ஒப்பந்தம் வழங்கப்பட்டு சுமார் 45 கிராம் மதிப்புடன் மொத்தம் 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டன.
இதில் பிரிட்டானியா நிறுவனம் 45 கிராம் எடையுள்ள 10 லட்சத்து 3,996 கேக்குகளையும், ட்ரீம் பேக் நிறுவனம் 45 மற்றும் 50 கிராம் எடையுள்ள 33 லட்சத்து 87,459 கேக்குகளையும் வழங்கி உள்ளது.
எலைட் நேச்சுரல் நிறுவனம் 45 கிராம் எடையுள்ள 10 லட்சத்து 6,861 கேக்குகளையும், ஐடிசி நிறுவனம் 43.2 கிராம் எடையுள்ள 8 லட்சத்து 48,096 கேக்குகளையும் தயாரித்துள்ளது.தமிழகத்தில் முதல்முறையாக குழந்தைகள் தினத்தையொட்டி அரசு சார்பில் முதல்வர் விஜய் இன்று காலை சுமார் 10 மணி அளவில் கொளத்தூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கேக்குகளை வழங்கி தொடங்கி வைத்தார். முதலில் இந்த திட்டத்தை அம்பாசமுத்திரம் தொகுதியில் முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொளத்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டது. தலைநகர் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்படுகிறது.














