Home செய்திகள் தேசிய செய்திகள் டிக் டாக் வீடியோவுக்காக திறந்தபுலி தாக்கி ஊழியர் பலி

டிக் டாக் வீடியோவுக்காக திறந்தபுலி தாக்கி ஊழியர் பலி

லாகூர்: நவ. 14-
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள கஹ்னா கிராமத்தில், டிக் டாக் வீடியோ எடுப்பதற்காக கூண்டிலிருந்து திறந்துவிடப்பட்ட புலி தாக்கியதில் 19 வயது பண்ணை ஊழியர் உயிரிழந்தார்.கஹ்னா கிராமத்தில் தனியார் விலங்குகள் பராமரிப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணை, விலங்குகளை வளர்ப்பது மற்றும் இனப்பெருக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த டிக் டாக் பிரபலமான நோமன் ஹாசன், சாகச வீடியோ எடுக்கத் திட்டமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பண்ணையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலியை அவர் வேண்டுமென்றே வெளியே திறந்துவிட்டதாக கூறப்படுகிறது.கூண்டிலிருந்து வெளியே வந்த புலி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த 19 வயதான பண்ணை ஊழியர் தல்ஹாவை புலி கடித்துக் குதறியது. இதில் தல்ஹா படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பண்ணை உரிமையாளர் பயாஸ் மற்றும் டிக் டாக் பிரபலமான நோமன் ஹாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூண்டிலிருந்து தப்பியோடிய புலியும் பின்னர் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “டிக் டாக் வீடியோ மீது மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை என்ற பெயரில் மனித உயிரைப் பணயம் வைக்க யாரையும் அனுமதிக்க முடியாது” என்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.