
காஸிரங்கா: நவ. 14-
அசாம் மாநிலம் காஸிரங்கா அருகே ராங்ஜன் பகுதியில் மினி பேருந்தும், வேகமாக வந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினி பேருந்து போகாகாட் பகுதியில் இருந்து நகோவானை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ராங்ஜன் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. பேருந்தும் லாரியும் வேகமாக மோதிக்கொண்டதில், மினி பேருந்து முழுவதுமாக உருக்குலைந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பேருந்துக்குள் சிக்கிக்கொண்டிருந்த மாணவர்களையும், மற்றவர்களையும் அவர்கள் மீட்டனர். மீட்புப் பணிகளின்போது பேருந்திலிருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோலாகாட் பகுதி மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்வப்னாநீல் தேகா கூறுகையில், “பேருந்திலிருந்து ஏராளமான உடல்களை மீட்டுள்ளோம். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.
இதனிடையே, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட இரங்கல் செய்தியில், “காஸிரங்கா பூங்கா அருகே நடந்த விபத்து குறித்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














