
புதுடெல்லி: நவம்பர் 16-
கடந்த ஏழு ஆண்டுகளில் 161 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆங்கில நாளேடு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், வெளியுறவுத் துறை அமைச்சராக ஏழு நீண்ட, சவாலான ஆண்டுகளைக் கடந்த பிறகும் முழுமையான புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாகக் கூறினார்.
வெளியுறவுத் துறை அமைச்சரின் ஒவ்வொரு நாளும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும், பெரும்பாலும் தினமும் புதிய இடங்களில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2019-ஆம் ஆண்டு அமைச்சராகப் பதவியேற்றது முதல் இதுவரை 161 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இதில் 2026-ஆம் ஆண்டில் மட்டும் மேற்கொண்ட 23 பயணங்களும் அடங்கும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
வெவ்வேறு கால மண்டலங்களுக்கு இடையே தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியிருப்பதால், வழக்கமான 24 மணி நேர அட்டவணையைப் பின்பற்றுவதோ, தொடர்ந்து ஏழு மணி நேரம் தூங்குவதோ சாத்தியமற்றதாகிறது என்று அவர் குறிப்பிட்டார். இதனால் சூழலுக்கு ஏற்ப தனது பணி அட்டவணையைத் தொடர்ந்து மாற்றியமைத்துக் கொள்வதாகவும், அது தனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.வெளிநாட்டுப் பயணங்களை நிர்வகிப்பதுடன், முக்கியமான தொலைபேசி அழைப்புகளுக்காக நள்ளிரவில் விழித்திருந்து பேசிவிட்டு தூங்க முயற்சிக்கும் சூழலும் ஏற்படுவதாக அவர் கூறினார். உலக நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பதோடு, அமைச்சராக உள்நாட்டுப் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். இத்தகைய பணிச்சுமைகளுக்கு இடையிலும் உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் மனதை அமைதியாக வைத்திருக்கவும் தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதாக ஜெய்சங்கர் கூறினார்.















