
புதுடில்லி: செப். 2-
இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதியாக, மருத்துவம் அல்லாத பிரிவில் சக்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா, இந்தியப் பாதுகாப்புப் படைகளின் வரலாற்றிலேயே விமானப்படையின் மருத்துவம் சாராத முதல் பெண் அதிகாரி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அவர் டில்லியில் உள்ள விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தலைமை அதிகாரியின் உதவித் தலைவராக பொறுப்பேற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவம் அல்லாத பிரிவில் இந்திய விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய விமானப் படைக்கு வரலாற்று மைல்கல்லாகும். ஏற்கனவே அவர் ‘ஏர் கமோடோராக’ பதவி வகித்து வந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த சக்தி சர்மா கடந்த 1994ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி சக்தி ஷர்மா இந்திய விமானப்படையின் கல்விப் பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அன்று முதல், அவர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் விமானப்படைத் தலைமையகங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு பணிகளில் பணியாற்றி, அனுபவத்தைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர், முப்படைகளில் இருந்து ஒரு சைனிக் பள்ளிக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி என்ற மற்றொரு பெருமையையும் பெற்றுள்ளார். இந்திய ராணுவம் முழுவதும் பெண் அதிகாரிகளின் பங்கும் பொறுப்புகளும் விரிவடைந்து வரும் பின்னணியில் இவரது பதவி உயர்வு அமைந்துள்ளது. இந்தியப் பாதுகாப்புப் படைகளில் மருத்துவப் பின்னணி இல்லாத ஒரு பெண் அதிகாரிக்கு ஏர் வைஸ் மார்ஷல் பதவிக்கான முதல் நியமனமாக ஷர்மாவின் நியமனம் அமைந்துள்ளது. இவர் இந்திய விமானப்படைக்குள் கல்வி தொடர்பான பொறுப்புகளை மேற்பார்வையிடுவார்.













