
தெஹ்ரான்: நவ. 18-
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதுடன், அந்த வழியாகச் சென்ற கச்சா எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுகத் தீர்வு எட்டப்பட்டதால், அங்கு சற்று அமைதி நிலவியது.
இதையடுத்து, ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் தொடக்கம் வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களை ஈரான் தாக்கியது. தொடர்ந்து சில வாரங்கள் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, அங்கு அமைதி நிலவி வந்தது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக இரு தரப்பும் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. ஹர்முஸ் ஜலசந்தி அருகே உள்ள குவாசம் தீவில் அமைந்துள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன.
இதற்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தை குறிவைத்து ஈரான் கடந்த 13, 16, 17 ஆகிய தேதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. ரிபா நகரில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தின் ரேடார் மற்றும் ஷேக் இசா விமானப்படைத்தளத்தின் ரேடார் ஆகியவை குறிவைக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களை பஹ்ரைன் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது.
இந்நிலையில், பஹ்ரைன் தாக்குதலுக்குப் பதிலடியாக குவாசம் தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தளத்தையும் ஈரான் டிரோன் மூலம் தாக்கியது. அந்தத் தாக்குதலை குவைத் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.













