Home செய்திகள் தேசிய செய்திகள் தீபாவளி பம்பர் லாட்டரியில்லாரி டிரைவருக்கு ரூ.12 கோடி

தீபாவளி பம்பர் லாட்டரியில்லாரி டிரைவருக்கு ரூ.12 கோடி

சண்டிகர்: நவ. 18-
பஞ்சாப் மாநிலம் மொகாலி அருகே உள்ள ஹம்யுன்பூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பல்ஜிந்தர் சிங்குக்கு, தீபாவளி பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. சிறிய நிலத்தில் விவசாயமும் செய்து வரும் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பல்ஜிந்தர் சிங் கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்தினருக்குத் தெரியாமல் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். வீட்டில் லாட்டரி வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. ‘‘அதிர்ஷ்டம் எப்போதும் கைகொடுக்காது. அதனை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்’’ என்பதே அவரது குடும்பத்தினரின் நிலைப்பாடாக இருந்தது.
ஆனால், அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த பல்ஜிந்தர் சிங், என்றாவது ஒருநாள் பெரிய பரிசுத்தொகை கிடைக்கும் என நம்பினார். பண்டிகை காலங்களில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த அவர், இதுவரை பரிசு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தபோதிலும் மனம் தளரவில்லை.
தீபாவளியையொட்டி மொகாலியின் ஜிராக்பூரில் உள்ள லாட்டரி கடையில் ரூ.500 செலுத்தி, ‘பஞ்சாப் மாநில டியர் தீபாவளி பம்பர் லாட்டரி’ சீட்டை வாங்கினார். இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், பல்ஜிந்தர் சிங்குக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்தது. இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். லாட்டரி வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து, பல்ஜிந்தர் சிங் நேற்று லாட்டரி விற்பனை நிலையத்துக்குச் சென்று பரிசுத்தொகையைப் பெறுவதற்கான நடைமுறைகளை முடித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நான் 2010-ம் ஆண்டு முதல் லாட்டரி வாங்கி வருகிறேன். பண்டிகை காலங்களில் மட்டும் லாட்டரி சீட்டுகளை வாங்கி, யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொள்வேன். என்றாவது ஒருநாள் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வாங்கி வந்தேன். ஒவ்வொரு முறையும் பரிசு விழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். இப்போது ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது. பரிசுத்தொகையை வழங்கிய கடவுளுக்கு நன்றி’’ என்றார். பரிசுத்தொகையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘‘என்னுடைய 2 குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்ய உள்ளேன்’’ என்று பல்ஜிந்தர் சிங் தெரிவித்தார்.