
ஜெய்ப்பூர்: நவ. 24-
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம் ஹர்சோலி கிராமத்தைச் சேர்ந்த ப்ரீத்தியின் திருமணத்தில், அவரது மறைந்த தந்தையுடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள், அதிகாரிகள் குடும்பத்துடன் பங்கேற்று சீர்வரிசை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரீத்தியின் தந்தையான ஹவில்தார் பப்பல் சிங், ராணுவத்தில் பணியாற்றியபோது உயிரிழந்தார். இதனால், தனது திருமண நிகழ்ச்சியில் தந்தை அருகில் இல்லாத குறையை ப்ரீத்தி உணர்ந்தார். தந்தையின் இழப்பால் ஏற்பட்டிருந்த அந்தக் குறையை ஓரளவுக்குப் போக்கும் வகையில், அவர் பணியாற்றிய 16-வது ஜாட் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமண விழாவில் அந்தப் படைப்பிரிவின் அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் ப்ரீத்தியின் குடும்பத்தினருடன் இணைந்து, தந்தை இல்லாத நிலையை உணராத வகையில் உறுதுணையாக இருந்தனர். மேலும், திருமணச் செலவுகளுக்காக ரூ.1.61 லட்சம் நிதியுதவியையும் வழங்கினர்.ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதரவளித்தது, ப்ரீத்தியின் குடும்பத்தினரை நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்தச் செயல் கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் மணமகன் வீட்டாரிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ராணுவப் படைப்பிரிவினர் காட்டிய ஆதரவுக்கும் அன்புக்கும் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
‘சேவா பரமோ தர்மா’ — பிறருக்குச் சேவை செய்வதே உயர்ந்த அறம் — என்ற கொள்கைக்கு இந்த ராணுவ வீரர்களின் செயல் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தாலும், அவருக்கும் சக வீரர்களுக்கும் இடையிலான பந்தமும், அவரது குடும்பத்தின் மீதான பொறுப்பும் முடிவதில்லை என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.













