Home மாவட்டங்கள் பெங்களூர் விடுதி மாடியில் இருந்து தள்ளி காதலி கொலை: காதலன் கைது

விடுதி மாடியில் இருந்து தள்ளி காதலி கொலை: காதலன் கைது

பெங்களூரு, நவ. 24-
பெங்களூரு கங்கம்மனகுடி அருகே உள்ள அபிகெரே ஒய்மேக்ஸ் சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிக்குச் சென்ற காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த காதலன் தனது காதலியை விடுதி மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரே கொலை செய்யப்பட்டவர் ஆவார். இந்தக் கொலையைச் செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த அவரது காதலன் சந்தோஷை கங்கம்மனகுடி போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ஐஸ்வர்யாவும் சந்தோஷும் காதலித்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இருவரும் அந்தத் தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏதோ ஒரு விஷயமாகத் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சந்தோஷ் ஐஸ்வர்யாவை விடுதியின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து கங்கம்மனகுடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஆனால் விசாரணையின் போது கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இது தற்கொலை அல்ல, கொலை என்பது தெரியவந்தது. காதலன் சந்தோஷ் தான் ஐஸ்வர்யாவை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்தது உறுதியானதைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்தபோது அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கைதான சந்தோஷிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.