
கள்ளக்குறிச்சி: நவ. 26-
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி நேற்று சம்மன் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், தனக்கு விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக பெண் ஆட்சியர், மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து, ஆய்வாளர்
புவனேஸ்வரி நேற்று, கள்ளக்குறிச்சி கச்சிராயாப்பாளையம் சாலையில் உள்ள தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இல்லத்துக்கு சம்மன் வழங்குவதற்காக சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டி ருந்தது.இதுதொடர்பாக போலீஸார் விசாரித்த போது எம்எல்ஏ விக்னேஷ் வீட்டுக்கு கட்சியினர் பலரும் வந்து செல்வதால் வீட்டை பூட்டி வைத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். பின்னர் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே சென்ற ஆய்வாளர், எம்எல்ஏவிடம் சம்மனை வழங்கி விட்டுச் சென்றார்.
நேற்று முழுவதும் பூட்டிய வீட்டுக்குள் இருந்த எம்எல்ஏ அருள் விக்னேஷ் அவ்வப்போது வெளியே வந்து எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றார்.
இதனிடையே ஆட்சியர் புகார் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங், நேற்று காலை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ஷானாஸிடம் ஆலோசனை நடத்தினார்.அப்போது இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விபரங்கள் அடங்கிய கோப்புகளை, விசாரணை அதிகாரியிடம் கள்ளக்குறிச்சி எஸ்பி வழங்கியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து பிற்பகல் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், ஆட்சியரிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தவெக எம்எல்ஏ விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளன. இதனால் விக்னேஷ் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது.













