
பெங்களூரு, நவ. 25-
தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ்கவுடா கொலை வழக்கில், எம்.எல்.ஏ. வினய் குல்கர்னியின் ஜாமீன் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளதுடன், 2 வாரங்களுக்குள் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி மீண்டும் சிறைக்குச் செல்ல இருப்பதுடன், எம்.எல்.ஏ. பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார்.
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ்கவுடா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. வினய் குல்கர்னிக்கு, மாநில ஐகோர்ட்டு தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியிருந்தது. மாநில ஐகோர்ட்டின் இந்த ஜாமீனை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் யோகேஷ்கவுடாவின் சகோதரர் குருநாத்கவுடா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி, வினய் குல்கர்னியின் ஜாமீனை ரத்து செய்தது. மேலும், இன்னும் 2 வாரங்களுக்குள் கோர்ட்டில் சரணடையுமாறும் உத்தரவிட்டுள்ளது.
தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த யோகேஷ்கவுடா கொலை வழக்கு தொடர்பாக, விசாரணை கோர்ட்டு 2026-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி வினய் குல்கர்னி உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, ஏப்ரல் 17-ந் தேதி வினய் குல்கர்னி உள்ளிட்ட 16 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான சன்னகேசவ திங்கரிகருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. விசாரணை கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து வினய் குல்கர்னி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஜூலை 31-ந் தேதி ஐகோர்ட்டு, மேல்முறையீட்டு மனு மீது இறுதித் தீர்ப்பு வரும் வரை தண்டனை மற்றும் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து ஜாமீன் வழங்கியிருந்தது.
ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் குருநாத்கவுடா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு படியேறினர். தற்போது இந்த ஐகோர்ட்டு ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளதால், எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி மீண்டும் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், எம்.எல்.ஏ. பதவியிலிருந்தும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார்.
யோகேஷ்கவுடா கொலை வழக்கு பின்னணி:
- ஜூன் 15, 2016 அன்று யோகேஷ்கவுடா கொலை செய்யப்பட்டது.
- 2019-ம் ஆண்டில் மாநில அரசால் இந்த வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது.
- நவம்பர் 5, 2020 அன்று வினய் குல்கர்னி கைது செய்யப்பட்டது.
- ஆகஸ்டு 2021-ல் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
- மே 2023-ல் தார்வார் சட்டசபை தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
- ஜூன் 2025-ல் சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் ஜாமீனை ரத்து செய்தது.
- ஏப்ரல் 15, 2026 அன்று 16 பேர் குற்றவாளிகள் என மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
- பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
- மே 2026-ல் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது.
- ஜூலை 31, 2026 அன்று ஐகோர்ட்டு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
- ஆகஸ்டு 2026-ல் ஐகோர்ட்டின் தடையாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.














